ரயில்களில் கட்டண உயர்வு நாளை (01.07.2025) முதல் அமலுக்கு வருவதாக மத்திய ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஏசி மற்றும் ஏசி வசதி அல்லாத ரயில்களுக்கான கட்டண உயர்வு என்பது சுமார் அரை பைசா முதல் இரண்டு பைசா வரையிலும் இருக்கும் என்று மத்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஏசி வசதி அல்லாத இரண்டாம் வகுப்பு ரயிலைப் பொறுத்தவரையில் கிலோ மீட்டர் வாரியாக கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அதன்படி 500 கிலோமீட்டர் வரை எந்த ஒரு கட்டண உயர்வும் இல்லை. 501 கிலோமீட்டர் முதல் ௧௫௦௦ கிலோமீட்டர் வரை ரூ. 5 வரையிலான கட்டண உயர்வை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேபோல 1501 முதல் 2500 கிலோமீட்டர் வரை ரூ. 10 கட்டணமும், 2501 கிலோமீட்டர் முதல் 3000 கிலோமீட்டர் வரை ரூ. 15 வரையிலும் கட்டண உயர்வை மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் முதல் வகுப்பைப் பொறுத்தவரையில் ஏசி ரயில்களில் கிலோமீட்டருக்கு அரை பைசா வரை கட்டண உயர்வு என்பது அதிகரித்துள்ளது.மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி வசதி அல்லாத ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசா வரை கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியுடைய சேர் கார், மூன்றாவது பிரிவு, இரண்டாவது பிரிவு மற்றும் முதல் பிரிவு என அனைத்து பகுதிகளுக்கும் கிலோமீட்டருக்கு 2 பைசா வரையிலான கட்டண உயர்வை மத்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டணம் உயர்வு என்பது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. அதே சமயம் தேஜஸ் ராஜஸ்தானி, சதாப்தி துரந்தோ மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை பொறுத்தளவில் அதற்கான மாற்றம் செய்யப்பட்ட பரிந்துரை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் நாளை முதல் இந்த தட்கல் டிக்கெட்களுக்கான ஆதார் எண்களைக் கொண்டு பதிவு செய்வது கட்டாயம் என்ற விதியும் அமலுக்கு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.