Skip to main content

“நான் சாவர்க்கர் அல்ல, காந்தி..” - பாஜகவை விளாசிய ராகுல்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

RahulGandhi said My name is Gandhi, and I don't apologise to anyone

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. 

 

அதானி குழுமம் தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால்தான் பிரச்சனை தொடங்கியது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணர்கிறேன். ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன்வைக்கிறேன். ஆனால், பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.  பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும முதலீடுகள் நடைபெற்றுள்ளன. அந்த முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அதானி குழுமத்தில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது? மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன்.

 

முதலில் சபாநாயகருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், என்னைப் பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அதைக் குறித்து எனது கருத்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் வைக்க எனக்கு உரிமை உள்ளது. அதற்கு அனுமதியளியுங்கள் என்றேன். ஆனால், எனது முதல் கடிதத்திற்கு எந்தப் பதிலும் இல்லை. இரண்டாவதாக ஒரு கடிதம் எழுதினேன். அதில், கூடுதலான தகவல்களையும், யார் சொன்னார்கள் என்பதையும், என்ன சொன்னார்கள் என்பதனையும் அவர்களின் பெயர்களுடன் குறிப்பிட்டேன். அதற்குப் பதில் இல்லை. மூன்றாவதாக நான் சபாநாயகரின் அறைக்கே நேரடியாகச் சென்று, “நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு என்ன நடக்கிறது. நீங்கள் ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய இடத்தில் இருப்பவர். ஏன் எனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை” என்றேன். அதற்கு சபாநாயகர் சிரித்துவிட்டு, “என்னால் அதைச் செய்ய முடியாது” என்றார்.

 

பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நான் இந்தியாவை எந்த இடத்திலும் இழிவுபடுத்திப் பேசவில்லை; பாஜகவினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டினைச் சொல்கின்றனர். மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் நபராகவே இருக்கிறேன். கைதுக்கு ஒரு போதும் அஞ்சமாட்டேன். 

 

அதானி குறித்து என்னுடைய அடுத்த நாடாளுமன்றப் பேச்சைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்த அச்சத்தை நான் அவரது கண்களில் பார்த்துள்ளேன். அதன் காரணமாக முதலில் என் பேச்சுக்கு தடங்கல் ஏற்படுத்தினார்கள். பிறகு தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். நான் வெறும் உண்மையை மட்டுமே பேசுவேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன். அவர்கள் என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நாடாளுமன்றத்தின் உள்ளேயோ வெளியேயோ அதைப் பற்றி கவலைப்படாமல் நான் எனது பணிகளைத் தொடர்ந்து செய்வேன். நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன்” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து உங்களின் பேச்சுக்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், “எனது பெயர் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி.. காந்தி ஒரு போதும் மன்னிப்பு கேட்கமாட்டான்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ராகுல் காந்தி பிறந்த நாள்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய காங்கிரஸ் 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Congress has provided welfare assistance on the occasion of Rahul Gandhi's birthday

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம். புள்ளம்பாடி உள்ளிட்ட 11 வட்டாரங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள  பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து பட்டத்தம்மாள் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பிரமிளா, மகளிர் அணி சுதா, வட்டார தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு அப்துல் காதர், சேவாதளம் தெற்கு மாவட்ட தலைவி லட்சுமி, சேவா தளம் வடக்கு மாவட்ட தலைவி மேரி ஆஷா, வட்டார பொறுப்பாளர் செல்வம், மண்ணச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா, நிர்வாகிகள் செல்வராஜ், மாசிலாமணி, பழனியாண்டி, கணேசன், மூர்த்தி, சந்தியாகு அலெக்ஸாண்டர் உட்பட திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் திருச்சி கலை கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Story

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.