Skip to main content

நாட்டிற்காக 32 தோட்டாக்களை தாங்கியவரின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை - ராகுல் காந்தி வேதனை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

rahul gandhi

 

1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானை போரில் வென்று, அந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்கத்தை, வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கியது. இந்தப் போரில் இந்தியா வென்ற தினம், ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவாஸ்) அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றோடு (16.12.2021) பாகிஸ்தானை இந்தியா போரில் வென்று 50 ஆண்டுகள் நிறைவடைந்தது.

 

இதனையொட்டி மத்திய அரசு சார்பில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தானைப் போரில் வென்றபோது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலையொட்டி, நேற்று அம்மாநிலத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் சார்பில் 1971 போரில் பங்கேற்ற வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது, இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சிக்கவும் செய்தார். அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது வருமாறு,

 

“எனது குடும்பத்துக்கும் உத்தரகாண்ட் மாநிலத்திற்குமான உறவு எனக்கு நினைவிருக்கிறது. என் பாட்டி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த அக்டோபர் 31ஆம் தேதி எனக்கு நினைவிருக்கிறது. என் தந்தை ராஜீவ் காந்தி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த மே 21 எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் தியாகத்தின் உறவு இருக்கிறது. உத்தரகாண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செய்த தியாகத்தை எனது குடும்பமும் செய்துள்ளது. தனது இரத்தத்தை இழந்து இங்கு நிற்பவர்களால் அந்த தியாகத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் இருப்பவர்களால் இதை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், தியாகம் செய்யாத குடும்பத்தினாலோ அல்லது நபராலோ அந்த தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

 

ஆப்கானிஸ்தானை வீழ்த்த அமெரிக்கா 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால் 13 நாட்களில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. 1971இல் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒன்றுபட்டு ஒன்றாக நின்றது. சிலர் இராணுவம் போரை வென்றது என கூறுகின்றனர், சிலர் அரசியல் தலைமையினால் போரில் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றனர். கடற்படை மற்றும் விமானப்படையினரால் போரில் நாம் வெற்றிபெற்றதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு மதமும் ஒன்றுபட்டதால்தான் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 

 

அந்த வெற்றிக்கு மற்றொரு காரணம் பாகிஸ்தான் பிளவுபட்டிருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் பலவீனமாக இருந்தது. இது மிக முக்கியமான பாடம். இந்தியா ஒன்றாக நின்றபோது அமெரிக்காவின் 7வது கடற்படைபிரிவு திரும்பிச் சென்றது. நாம் ஒன்றிணைந்து பேசும்போது, இந்தியாவின் முன் எந்த சக்தியும் நிற்க முடியாது. இன்று நாடு பிளவுபடுத்தப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டுவருகிறது என்பது வேதனையான விஷயம்.  நாட்டுக்காக 32 தோட்டாக்களைத் தாங்கிய பெண்மணியின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை. உண்மையைப் பார்த்து அரசு பயப்படுவதே இதற்குக் காரணம். இருப்பினும், இது என்னைக் கவலையடையச் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நாட்டிற்காக தனது இரத்தத்தை சிந்தினார் என்பதை நான் அறிவேன்.

 

இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களுக்காக அரசு செயல்படுகிறது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தொழிலதிபர்களின் ஆயுதங்கள். பிரதமர் நரேந்திர மோடி அதைச் செயல்படுத்தினார். டில்லியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும்வரை, இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்தியா வலுவடைந்துகொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டாம். அவ்வாறான தவறான எண்ணங்களைக் கொண்டிருக்காதீர்கள். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் டாங்கிகள் நாட்டை வலிமையாக்காது. மக்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே நாடு வலிமை பெறும்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்