Advertisment

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

Rahul Gandhi's appeal in the Supreme Court

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடிகுஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி சார்பில் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதிதீர்ப்பு வழங்கி இருந்தது. அதில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது என தெரிவித்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில் ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.அதில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது. சரியான முறையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.எனவே குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வரும் திங்கள் கிழமை (ஜூலை 17) இந்த வழக்கை அவசரவழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ராகுல் காந்தி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe