Rahul Gandhi went to the homes of the listed people and cooked and ate

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, அவ்வப்போது தொழிலாளிகள், விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் என எளிய மனிதர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அத்தோடு மட்டுமல்லாமல் தொழிலாளிகளுடன் டீ குடிப்பது, உணவருந்துவது, அவர்களின் வேலைகளில் பங்கெடுப்பது என ராகுல் காந்தியின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் உணவு சமைத்து ராகுல்காந்தி சாப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அஜய் துக்காராம் சனதே என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அஜய் துக்காராம் சனதே வீட்டிற்குச் சென்ற ராகுல் காந்தியை அவரும், அவரது மனைவி அஞ்சனாவும் இன்முகத்தோடு வரவேற்றனர். அவர்களின் வாழ்கையை பற்றிக் கேட்டறிந்த ராகுல்காந்தி வீட்டின் சமையல் முறை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் வீட்டின் சமையலறைக்கே சென்ற அவர், அவர்களின் பாரம்பரிய முறைப்படி எப்படி உணவு தயாரிப்பது எனக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து சமைத்துமும் உள்ளார். கத்திரிக்காய், கீரை, துவரம் பருப்பு சேர்த்து ‘ஹர்பர் யாச்சி பாஜி’ என்ற உணவைச் சமைத்த ராகுல் காந்தி அஜய் குடும்பத்தினருடன் சேர்ந்து ருசித்துச் சாப்பிட்டார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “பட்டியலின மக்களின் சமையலறை பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். சமூக ஆர்வலர் ஷாஹு கூறியதுபோல், பட்டியலின மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தனது வீட்டுக்கு வரவேண்டும் என்று அஜய் மிகுந்த மரியாதையுடன் என்னை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று நான் சென்றேன். என்னை அன்புடன் வரவேற்றார். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? எப்படி சமைக்கிறார்கள்? அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்துக் கேட்டறிந்தேன். அத்துடன் சமைக்கவும் என்னை அனுமதித்தார்.

Advertisment

பட்டியலின சமூகம் என்பதால் புறக்கணிப்பு போன்ற பல்வேறு அனுபவங்களை அஜய் குடும்பத்தாரிடம் கேட்டறிந்தேன். ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவமும் சாத்தியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.