ராகுல் காந்தி கூறிய "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், டெல்லியை பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என பிரதமர் மோடி பேசிய வீடியோவை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் 'மேக் இன் இந்தியா' குறித்து பேசி வரும் நிலையில், தொடர் பாலியல் வன்முறைகள் அரங்கேறி, 'ரேப் இன் இந்தியா'வாக தற்போது நம் நாடு உள்ளதாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் அமளியிலும் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லியை பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என பிரதமர் மோடி பேசிய வீடியோ தனது செல்போனில் இருப்பதாக கூறிய அவர், அதை அனைவரும் காண ட்விட்டரில் பகிரப் போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டரில், "வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்கு மற்றும் டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பதாக 2014 தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என பதிவிட்டு மோடி அப்படி பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். ராகுல் பதிவிட்ட இந்த பிரதமரின் பேச்சு பாஜகவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாகியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.