உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து, தற்போது10 ஆயிரத்தைக் கடந்தது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பதால் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கரோனா பரிசோதனை கருவிகளை வாங்க இந்தியா தாமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா தாமதித்ததால் இன்று பரிசோதனை கருவிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், 10 லட்சம் பேருக்கு 149 என்ற வீதத்திலேயே இந்தியாவில் பரிசோதனை கருவிகள் உள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.