மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 3239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் 105 பெண்கள் உள்ளிட்ட 1169 வேட்படாளர்கள் போட்டியிட்டனர்.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அசாந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., பக்ஷிஷ் சிங் விர்க் என்பவர் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, "யாருக்கு நீங்கள் வாக்களித்தாலும், அது பாஜகவிற்கு வந்து சேரும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்துள்ளோம். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் அது எங்களுக்கு தெரிந்துவிடும், எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதீர்கள்" என பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "இவர் தான் பாஜகவின் நேர்மையான மனிதர்" என பதிவிட்டுள்ளார். ஆனால் விர்க் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், இது போலியான வீடியோ என்றும், தான் அது போல மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.