Rahul Gandhi thanks to actor Vijay

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24-06-24) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

இதனையடுத்து, நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

Advertisment

தொடர்ந்து ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திக்கு, நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதே எக்ஸ் வலைத்தள பக்கத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 'ஒவ்வொரு இந்தியனின் குரல் ஒலிக்கும் போதும் நமது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. நன்றி விஜய்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment