Rahul Gandhi says Bilkis Banu's struggle is a sign of justice against the arrogant BJP government

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

Advertisment

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு இன்று (08-01-24) விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது. இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ‘குற்றவாளிகளின் ஆதரவாளர்கள்’ யார் என்பதை மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளது. பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியுடைய வெற்றியின் அடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment