Rahul Gandhi said that India is my home

ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், இந்த ஆண்டு(2023) மார்ச் மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.இதனால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் மக்களவை எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை டெல்லி துக்ளக் லேன் பகுதியில் வசித்து வந்த 12 ஆம் எண் அரசு பங்களாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

Advertisment

அதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத்தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டார்.

Advertisment

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதைத்தொடர்ந்துஅவர் இருந்த அதே வீட்டை ஒதுக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ராகுல் காந்திக்கு மீண்டும் 12 ஆம் எண் கொண்ட துக்ளக் லேன் வீடு நேற்று மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, “ஒட்டுமொத்த இந்தியாவே என்னுடைய வீடு தான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.