Skip to main content

தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்திய தலைவர்கள் - ராகுல் காந்தி சொன்ன பதில்!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

rahul gandhi

 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (16.10.2021) டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சி மோதல், கட்சித் தலைமை மீது மூத்த தலைவர்களின் அதிருப்தி என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த செயற்குழு கூடியது.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தான்தான் தற்போது கட்சியின் முழுநேர தலைவர் என அதிரடியாகத் தெரிவித்தார். இந்தநிலையில் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸின் அடுத்த தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என அசோக் கெலாட் முன்மொழிந்ததாகவும், அவரின் கருத்தைக் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி, ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்பதும், ஏற்காததும் அவர் கையில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தியின் பெயர் தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அம்பிகா சோனி, "அனைவரும் ஒரு மனதாக அதை (முன்மொழிவை) ஏற்றுக்கொண்டோம். அவர் கட்சியின் தலைவர் ஆவதும், ஆகாததும் அவர் கைகளில்தான் உள்ளது. ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டுமென்பதே அனைவரது விருப்பம்" எனத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து ஜி-23 என அழைக்கப்படும் அதிருப்தியிலுள்ள மூத்த தலைவர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அம்பிகா சோனி, ஜி-23 என்று கூட அங்கு (செயற்குழுவில்) குறிப்பிடப்படவில்லை. காங்கிரஸ் பிரிவுகளாக இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியத் தேசிய காங்கிரஸின் அனைத்து தலைவர்களும் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் என்று ஒருமனதாக விரும்புகிறார்கள். தலைவர் தேர்தலுக்கான செயல்முறை செப்டம்பரில் (2022) தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே செயற்குழுவில் பஞ்சாப் முதல்வர் சரண்சித் சன்னி,ராகுல் காந்தியைக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வலியுறுத்தியதாகவும், அதற்கு ராகுல் காந்தி, அதைப் பற்றி ஆலோசிப்பதாகத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்