Rahul Gandhi said Don't be afraid Modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத்தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் இன்று காலையில் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ. 210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பயப்பட வேண்டாம் மோடி. காங்கிரஸ் என்பது பண பலத்தில் உருவானது அல்ல. மக்கள் பலத்தில் உருவானது. சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலை வணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நகமும்சதையுமாக போராடுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.