Skip to main content

”மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்” - ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

rahul gandhi

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவுதினத்தை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நாடு முழுவதும் இன்று அனுசரித்து வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

 

இந்த நிலையில், தன்னுடைய தந்தையின் மறைவுதினத்தை நினைவுகூரும் வகையில் ராகுல் காந்தி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ”என்னுடைய தந்தை தொலைநோக்கு சிந்தனையுடைய தலைவர். அவரது சிந்தனைகள் நவீன இந்தியாவை உருவாக்குவதில் துணைபுரிந்தன. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறந்த தந்தையாக இருந்தார்.மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். அவருடன் நான் செலவழித்த நாட்களை அன்புடன் நினைவுகூருகிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைலாசாவில் பாஜக எம்பிக்கள் - போட்டுடைத்த கடலூர் இள.புகழேந்தி!

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Ela Pugazhendi interview

 

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி எடுத்து வைக்கிறார்

 

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து திமுகவினர் இழுத்ததாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அவருக்கு எந்த வரலாறும் தெரியவில்லை. அப்போது நான் சட்டமன்றத்தில் இருந்தேன். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அன்று அதிமுகவினர் சபைக்கு வந்தனர். பட்ஜெட் உரையைப் படிப்பதற்கு அன்றைய முதல்வர் கலைஞர் தயாராக இருந்தார். அப்போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்ட துக்ளக் சோ.ராமசாமியின் வழிகாட்டுதல்படி ஜெயலலிதா செயல்பட்டார். 

 

நடப்பது நடக்கட்டும் என்று கலைஞர் அப்போது அமைதியாக இருந்தார். அப்போது ஜெயலலிதா தன்னுடைய முடியைத் தானே கலைத்துக்கொண்டார். தன்னுடைய சேலையைத் தானே இழுத்துக்கொண்டு அலங்கோலமாக தன்னை மாற்றிக்கொண்டார். திமுகவைச் சார்ந்த யாரும் அவர் அருகில் கூட செல்லவில்லை. நடக்காத ஒன்றை நடந்தது போல் இந்தியா முழுவதும் பரப்பி திமுக மீது அவதூறு செய்து வருகின்றனர். இழிவான ஒரு நாடகத்தை அன்று நடத்தியவர் ஜெயலலிதா. வெளியே சென்று பத்திரிக்கையாளர்களிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக பேட்டி கொடுத்தார்.

 

நிர்மலா சீதாராமன் விவரம் தெரியாமல் பொய் பேசிக்கொண்டு திரியக்கூடாது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் பாஜகவினர் இழுத்து வருகின்றனர். அது பற்றி நிர்மலா சீதாராமனால் பேச முடியவில்லை. ஒரு நிதியமைச்சராக இருக்கும் அவர், மதிகெட்டு அலையக்கூடாது. உண்மையைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்குகிறார். அவரை இவர்களால் பிடிக்க முடியவில்லை. கைலாசாவுக்கு அதிகம் சென்று வருவது பாஜகவினர் தான். 

 

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அனைத்தையும் மிகச்சரியாக செய்து வரும் ராகுல் காந்தி குறித்து ஏதாவது அவதூறு பரப்ப வேண்டும் என்று பாஜகவினர் காத்திருந்தனர். சென்று வருகிறேன் என்பதைத் தான் சைகையில் ராகுல் காந்தி சொன்னார். பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் தான் அதை அவர் தெரிவித்தார். அதை இவர்கள் பெண்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக இழிவாக மடைமாற்றினர். வெட்கமாக இல்லையா? அவர் மீது புகார் கொடுத்த பாஜக எம்.பிக்களில் பாதி பேர் இது வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

 

குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதித்துறையை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். அதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆ.ராசா பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசினார். "நீங்கள் பேசினால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்று மத்திய அமைச்சராக இருக்கும் மீனாட்சி லேகி என்பவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்டினார். அமலாக்கத்துறையை இவர்களுடைய வேலைக்காரர்கள் போல் பயன்படுத்துகிறார்கள். பாசிச வெறிபிடித்த இவர்களின் செயல்பாடுகளை ஆ.ராசா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

 

 

 

Next Story

பறந்த முத்தம்; பதறிய பாஜக எம்பிக்கள் - வெளுத்து வாங்கும் பியூஷ்மனுஷ்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Piyush Manush interview

 

சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...

 

கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

 

இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

 

கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ்  கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள். 

 

பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.