Rahul Gandhi Questioned How do you mean insulted? about Video Controversy

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 143 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (19-12-23) காலை, இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையாகி வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (20-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “குடியரசுத் துணை தலைவரை யார் அவமதித்தார்கள்?அவமதித்ததாக எப்படி சொல்கிறீர்கள்?எம்.பி.க்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். நான் வீடியோ எடுத்தேன். அந்த வீடியோ எனது செல்போனில் இருக்கிறது. நான் அதனை யாருக்கும் பகிரவில்லை.

Advertisment

ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, கருத்துக்களை வெளியிடுகின்றன. யாரும் எதையும் சொல்லவில்லை. 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதை பற்றி எந்த ஊடகங்களும் எந்த விவாதமும் நடத்தவில்லை. அதானி விவகாரம் குறித்தோ, ரஃபேல் விவகாரம் குறித்தோ, வேலைவாய்ப்பின்மை குறித்தோ எந்த விவாதமும் நடப்பதில்லை. எங்கள் எம்.பி.க்கள் மனம் உடைந்து வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மிமிக்ரி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.