Rahul Gandhi petitioned the High Court seeking quashing of the case

Advertisment

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதியன்று மூத்த பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ்,சில மர்ம நபர்களால் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான துருதிமன் ஜோஷி, லங்கேஷ் கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் அளித்த அந்த மனுவில், ‘கெளரி லங்கேஷ் இறந்த 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், பா.ஜ.க.வின் சிந்தாந்தத்திற்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்திற்கு எதிராக பேசும் எவரும் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். மேலும், வலதுசாரி அரசியலை கடுமையாக விமர்சிப்பதற்காக அறியப்பட்ட லங்கேஷைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி கூறியிருந்தார்’ என்று துருதிமன் ஜோஷி குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், இந்தியத் தண்டனையியல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சோனியா காந்தியை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. மேலும், இந்த வழக்கு குறித்து உரிய பதிலை கூற ராகுல் காந்திக்கும், சீதாராம் யெச்சூரிக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

Advertisment

அதனை தொடர்ந்து, இருவரும் வெவ்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துக்களுக்காக ஒன்றாக விசாரிக்கப்பட முடியாது என்று கூறி இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தில் இருவர் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது அவர்கள் அளித்த அந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று (17-10-23) மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை டிசம்பர் 5ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.