Rahul gandhi nomination file on reebareli in uttar pradesh

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. இதற்கிடையில் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று (03.05.2024) மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. நான்காம் கட்டமாக மே 20 ஆம் தேதி இந்தத்தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிட உள்ளார் என்றும் கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

Rahul gandhi nomination file on reebareli in uttar pradesh

இந்த நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை இன்று (03-05-24) தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர். இந்த மக்களவைத் தேர்தலில், ஏற்கெனவே கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.