Rahul Gandhi MP travel Hathras

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை (05.07.2024) உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல உள்ளார்.