rahul gandhi mourns buta singh

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங் (86) மறைவிற்கு குடியரசுத்தலைவர், பிரதமர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி பிறந்த பூட்டா சிங், 1962-ல் முதன்முதலில் ராஜஸ்தானின் ஜலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் எட்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்ம ராவ் உள்ளிட்ட நான்கு பிரதமர்கள் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இந்திரா காந்தி ஆட்சியில் நடத்தப்பட்ட ‘ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷ’னுக்குப் பின் பொற்கோயிலைச் சீரமைக்கும் குழுவுக்கும், பல்வேறு குருதுவாராக்களைச் சீரமைக்கும் குழுவுக்கும் தலைவராகப் பதவி வகித்தார்.

Advertisment

நீண்ட அரசியல் பயணத்திற்குப் பிறகு, கடந்த 2005 ஆம் ஆண்டு பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், அப்பதவியை ராஜினாமா செய்தபின் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட பூட்டா சிங், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 7.10 மணிக்கு காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இவரது மறைவிற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பூட்டா சிங் இறப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "விசுவாசமான தலைவரும், மக்களுக்கு உண்மையாகச் சேவையாற்றியவருமான பூட்டா சிங்கை இந்தத் தேசம் இழந்துவிட்டது. தனது வாழ்க்கையையே இந்தத் தேசத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் பூட்டா சிங். அவரை என்றென்றும் நினைவுகூர்வோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.