Rahul Gandhi expresses grief Gujarat plane crash is heartbreaking

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் 170 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தின் போது விடுதியில் இருந்த மாணவர்கள் சிலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே விமானத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னால் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் இந்த விமானத்தில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் அதிதீவிரமாக நடந்து வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விமான விபத்திற்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து மனதை உடைக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை - ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.