
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவுகளில் இருந்து இந்தியா பின்வாங்காமலேயே இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்ததற்கு பிறகு, எந்தவொரு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்காமல் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 15ஆம் தேதி முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதன் மூலம் நாங்கள் அடைய நினைத்த இலக்குகளை அடைந்துள்ளோம். முக்கிய இலக்குகள் அடையப்பட்டதில் இருந்து நாங்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்குவதே எங்கள் இலக்கு, ராணுவத்தை இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து ராணுவம் தள்ளி நிற்க வேண்டும் என்று நாங்கள் எடுத்த நடவடிக்கையின் தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பினோம்.
ஆனால், அவர்கள் நல்ல ஆலோசனையை எடுத்துக் கொள்ளவில்லை. மே 10ஆம் தேதி காலையில் அவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டவுடன் எவ்வளவு சேதத்தை நாங்கள் ஏற்படுத்தினோம் என்பதையும், அவர்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தினார்கள் என்பதையும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் காண்பித்தோம். இதன் மூலம் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த யார் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது” என்று கூறினார்.

ஜெய்சங்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது ஒரு குற்றம் என்று குற்றம் சாட்டினார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘நமது தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம். இந்திய அரசு இதைச் செய்ததாக வெளியுறவுத் துறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. யார் அதை அங்கீகரித்தார்கள்? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?’ எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிவித்ததால் எத்தனை விமானங்களை இழந்தோம் என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜெய்சங்கரின் மௌனம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அது மிகவும் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்குத் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்னரே தெரிவித்தது ஏதோ ஒரு குறைபாடு அல்ல, குற்றம். மேலும் தேசம் உண்மையை அறியத் தகுதியானது” மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.