Rahul gandhi crictized Modi at Rajasthan assembly election

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இதையொட்டி, ராஜஸ்தானில் பரத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (22-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் ஏழைகளுக்கு உதவும்போது, ஒவ்வொரு திட்டத்திலும் பா.ஜ.க பணக்காரர்களுக்கு உதவுகிறது. பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அப்படி அவர்கள் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது. அதனால், அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் வருவார்கள். ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்து கொண்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர்.

Advertisment

அது மாதிரி, மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. அவர்தொலைக்காட்சி முன் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் பிரச்சனை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார்.

இருவருக்கும் இடையே யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்தான் அமித்ஷா. அப்படி யாராவது வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார். மோடியை போலவே ஊடகங்களும் தங்கள் கவனத்தை திசைதிருப்ப வேலை செய்கின்றன. எந்த ஒரு ஏழை விவசாயியையும் ஊடகங்களில் நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால், மோடி, கிரிக்கெட்மற்றும் திரைப்பட நட்சத்திரங்களை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். நாட்டின் வலியை ஒருபோது தொலைக்காட்சி காட்டாது. ஏனென்றால் அது உங்களுடையது அல்ல, அதானியுடையது” என்று பேசினார்.