Skip to main content

‘ஆணவம்.. அவமரியாதை...’ - உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி கண்டனம்!

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
Rahul Gandhi condemns restaurant owner's apology

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் கேள்விகளை முன்வைத்தார்.

'உங்கள் பக்கத்தில் இருக்கிற எம்எல்ஏ (வானதி ஸ்ரீனிவாசனை குறிப்பிட்டு) எங்கள் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்கள். ஸ்வீட்டுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கொடுக்கிறீர்கள். உணவுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கிடையாது. காரத்திற்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் உள்ள பிரட், பன்னை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றுக்கும் 28% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள். இந்த அம்மா வர வேண்டியது ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி கொடுக்கணும். காரம் வேண்டும் என்பது. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்று சொன்னால் உடனே சண்டைக்கு வருவது. இது டெய்லி எங்களுக்கு நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தி.மு.கவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Rahul Gandhi condemns restaurant owner's apology

இந்த நிலையில், கோவை அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமானம் ஏற்பட்டிருப்பதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது அரசு ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் அணுகப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, ​​மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார். பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் தகுதியானது மேலும் அவமானம் தான். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான கெளரவம் பாதிக்கப்பட்டால், ​​​​அதற்கு காரணமானவர்களை அவமதிப்பதே வாடிக்கையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.