
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது. இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதன்படி, தற்போது சித்தராமையா கர்நாடகா மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, சித்தராமையாவின் பெயரை குறிப்பிடாததது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், காங்கிரஸ் சார்பில் விஜயநகர மாவட்டத்தில் ‘சமர்ப்பண சங்கல்ப சமவேஷா’ என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பல சித்தராமையா ஆதரவாளர்கள், சித்தராமையாவின் தலைமையையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிப் பேசினர். இதனையடுத்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் அரசின் வெற்றியைப் பற்றி மட்டுமே பேசினார். மாநில அரசைப் பற்றியோ, காங்கிரஸ் மூத்த தலைவரும் முதல்வருமான சித்தராமையாவின் பெயரையோ அவர் குறிப்பிடாமல் பேசியிருந்தார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் முணுமுணுப்புகள் இருந்து வருகிறது.
முதல்வர் சித்தராமையாவின் வருகைக்காக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தோரங்கல் ஜே.எஸ்.டபிள்யூ விமானப் பாதையில் காத்திருக்க வேண்டியிருந்ததால் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.