Skip to main content

"எனக்கு ஒரு பெரிய பிரச்சனை’ என அவர் கத்துகிறார். ஆனால்.." ராகுல் காந்தி ஆதங்கம்!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

Rahul gandhi

 

காங்கிரஸ் முன்னால் எம்.பி ராகுல் காந்தி, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரும், பேராசிரியருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் என்பவருடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினர். அப்போது, தான் பிரதமரானால் என்ன செய்வேன், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தோல்வியை சந்திப்பது ஏன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பதிலளித்தார்.

 

நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன் என தெரிவித்தார். இதுகுறித்து அவர், "நான், வளர்ச்சியை மையமாகக் கொண்ட திட்டத்திலிருந்து, வேலைவாய்ப்பை மையமாக கொண்ட திட்டத்திற்கு நகர்வேன். எங்களுக்கு வளர்ச்சி தேவை. ஆனால் உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டல் செய்யவும் அனைத்தையும் செய்யப்போகிறோம்" என பதிலளித்தார்.

 

அசாமில் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான காரில், வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, தேசிய ஊடகங்களை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "அசாமில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை நடத்துபவர், பாஜக வேட்பாளர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தோடு காரில் சுற்றித் திரியும் வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். ‘இங்கே பாருங்கள்.. எனக்கு ஒரு பெரிய பிரச்சனை’ என அவர் கத்துகிறார். ஆனால் தேசிய ஊடகங்களில் அதுகுறித்து எந்தப் பேச்சுமில்லை" என கூறினார்.

 

மேலும் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பது குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் மட்டுமல்ல, பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் வெற்றிபெறவில்லை. சமாஜ்வாடி தேர்தலில் வெற்றிபெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறவில்லை. தேர்தல்களில் எதிர்த்துப் போராட எனக்கு நிறுவன கட்டமைப்புகள் தேவை. என்னைப் பாதுகாக்கும் நீதி அமைப்பு தேவை. எனக்கு நியாயமான ஒரு ஊடகம் தேவை, எனக்கு நிதி சமத்துவம் தேவை. ஒரு அரசியல் கட்சியாக செயல்பட என்னை அனுமதிக்கும் நிறுவன கட்டமைப்புகள் எனக்குத் தேவை. அவை என்னிடம் இல்லை" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்