Rahul Gandhi alleges Unemployment is the cause of what happened in Parliament

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

Advertisment

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்.பி.க்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து,பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் இப்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டமே நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறலுக்கு காரணம். இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை திண்டாட்டம் இருக்கிறது. மோடியின் கொள்கைகள் வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வை தரவில்லை” என்று கூறினார்.