Rahul Gandhi accused Prime Minister did not read the constitution book in Parliament

நாடு முழுவதும் இன்று (26-11-24) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75வது ஆண்டு ஆகும். இந்த விழாவை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டார். அதன் பிறகு, அரசியல் சாசனத்தின் முன்னுரை வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடி அரசியலமைப்பை படிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுங்கள்’ என்று காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசு அரசியலமைப்பு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. இது இந்திய அரசியலமைப்பு என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஆனால், நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி இதைப் படிக்கவில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால், தினமும் செய்து வந்ததைச் செய்திருக்க மாட்டார்.

Advertisment

இந்த அரசியலமைப்பு புத்தகத்தில் சாவர்க்கரின் குரல் உள்ளதா? வன்முறையைப் பயன்படுத்த வேண்டும், மக்கள் கொல்லப்பட வேண்டும், பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? இது உண்மை மற்றும் அகிம்சை புத்தகம். டாக்டர் அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, புத்தர் மற்றும் காந்தி ஆகியோரால் சமூக அதிகாரமளிக்கும் யோசனைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. இந்த நாட்டில், கடந்த 3,000 ஆண்டுகளாக, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் பற்றி யார் பேசினாலும் அவர்களின் மைக் அணைக்கப்படுகிறது.

மைக்கை அணைத்ததும் பலர் வந்து என்னைப் போய் உட்காரச் சொன்னார்கள். உட்கார மாட்டேன் என்றேன்; நான் நிற்பேன். நீங்கள் விரும்பும் அளவுக்கு மைக்கை அணையுங்கள், நான் சொல்ல விரும்புவதைச் சொல்கிறேன். எனக்குப் பின்னால் ரோஹித் வெமுலாவின் புகைப்படம் உள்ளது, அவர் பேச விரும்பினார். ஆனால் அவரது குரல் பறிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Advertisment