rahul gandhi about lockdown relaxation

Advertisment

ஊரடங்கைத் தளர்த்தும் முன் மத்திய அரசு செய்ய வேண்டிய சில முக்கிய பணிகள் குறித்து ராகுல் காந்தி மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

இன்று காணொளிக்காட்சி மூலமாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மே 17 அன்று முடிவடையும் கரோனா வைரஸ் ஊரடங்கிற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமர் மட்டுமல்ல, வலுவான முதலமைச்சர்களும் தேவை. மத்திய அரசு லாக்டவுனைத் தளர்த்த விரும்பினால், மக்களிடம் தற்போது இருக்கும் அச்சம் நம்பிக்கையாக மாற வேண்டும். நியாயமாகப் பார்த்தால், நாம் இப்போது இயல்பான சூழலில் வசிக்கவில்லை. ஆதலால், இயல்பான முடிவு எடுக்க முடியாது. அதிகாரத்தைப் பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கரோனா போரில் தோற்றுவிடுவோம். ஆதலால் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்கினால்தான் கரோனாவை வெல்ல முடியும்.

எந்தெந்த பகுதிகளைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் உண்மை நிலவரம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குத்தான் தெரியும். எனவே, அவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் லாக்டவுனைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மாவட்ட அளவில் ஆட்சியர்களுடன் பேச வேண்டும்.

Advertisment

ஒரு முதலாளி மனப்பான்மையில் அல்லாமல், சக ஊழியரைப் போல் பிரதமர் மோடி பேச வேண்டும். சிறு, குறு தொழில்களுக்குப் பொருளாதார நிதித்தொகுப்பு, மக்கள் கைகளில் பணத்தை வழங்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி போன்றவற்றை வழங்கி லாக்டவுனைத் தளர்த்தத் தயாராவது அவசியம். இந்த நேரத்தில் நியாய் திட்டத்தை அமல்படுத்துவது சிறந்தது. நாட்டு மக்களில் 50 சதவீதம் பேருக்குப் பணத்தை நேரடியாக அரசு வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.