rahul gandhi about hathras issue

Advertisment

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நான்கு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "உ.பி.யின் வகுப்புவாத காட்டாட்சி மற்றொரு இளம் பெண்ணைக் கொன்றுள்ளது. இது போலியான செய்தி என்று அரசாங்கம் முதலில் கூறியது. தற்போது பாதிக்கப்பட்டவரை இறக்க விட்டுவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் போலியானது அல்ல, அதேபோல பாதிக்கப்பட்டவரின் மரணமோ அல்லது அரசாங்கத்தின் கொடூரத் தன்மையோ கூட போலியானது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.