/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/inve ni_14.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள சாலையோரத்தில், ரஞ்சித் (28) என்பவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, அங்குள்ள பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சியில், ரஞ்சித்தை பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், ஜெய்ஸ்ரீ (24), ஆகாஷ் மற்றும் ஜெய்ஸ்ரீயின் தோழி என 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், நாக்பூரில் உள்ள சாலையோர கடையில், ஜெய்ஸ்ரீ தனது தோழியுடன் சேர்ந்து புகை பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த கடைக்கு வந்த ரஞ்சித், கடையின் முன்பு இளம்பெண்கள் புகைபிடித்துக் கொண்டிருப்பதை முறைத்தபடி உற்றுப் பார்த்துள்ளார். மேலும், ஜெய்ஸ்ரீ சிகரெட் புகையை ரஞ்சித்தை நோக்கி விட்டுள்ளார். இதனை ரஞ்சித், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது தோழியும் சேர்ந்து, ரஞ்சித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெய்ஸ்ரீ தனது நண்பரான ஆகாஷை செல்போன் மூலம் அழைப்பு விடுத்து வர வைத்துள்ளார். அதன் பேரில், ஆகாஷ் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதனிடையே, ரஞ்சித் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனாலும், ஆத்திரமடங்காத ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பரகள் என 3 பேரும் ரஞ்சித்தை கடுமையாகத்தாக்கியுள்ளனர். மேலும், ஜெய்ஸ்ரீ கத்தியைக் கொண்டு ரஞ்சித்தை குத்திக் கொலை செய்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us