Advertisment

பெண் விவசாயி கேட்ட கேள்வி; சோகத்தில் ஆழ்ந்த சோனியா காந்தி 

The question asked by the female farmer; Sonia Gandhi was deeply saddened

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தினார். அப்போது, ஹரியானா மாநிலத்தில் உள்ள பெண் விவசாயிகளைச் சந்தித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது தலைநகர் டெல்லியைப் பார்க்க வேண்டும் என அந்தப் பெண் விவசாயிகள் ராகுல் காந்தியிடம் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற, டெல்லியிலுள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு விருந்துக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு அந்தப் பெண்களும் வருவதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் தனி வேனில் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கு வந்த பெண் விவசாயிகளை, ராகுல் காந்தி,சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வரவேற்றனர். மேலும், பெண் விவசாயிகளுக்கு சோனியா காந்தியின் வீட்டில் விருந்தளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் ஹரியானா பெண் விவசாயிகள் கலந்துரையாடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சியை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில், பெண் விவசாயி ஒருவர், “ராஜீவ் காந்தியின் இறப்புக்குப் பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள்?” என்று சோனியா காந்தியிடம் கேட்டார். அதற்கு சோனியா காந்தி, “மிகவும் வருத்தமாக இருந்தது” எனக் கூறினார். இதனைத் தெரிவித்துவிட்டு சோனியா மௌனமானார். உடனே அருகில் இருந்த பிரியங்கா காந்தி, “அவர் பல நாட்களாக வருத்தத்தில் இருந்தார். பல நாட்களாக அவர் சாப்பிடவில்லை. தண்ணீர் குடிக்கவில்லை” என்று கூறினார். உடனே அருகில் இருந்த மற்றொரு பெண் விவசாயி, “அது மிகவும் சிரமத்துக்குள்ளான நாள்தான். கடவுள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்” என்று கூறினார். இந்த பதிலுக்கு சோனியா காந்தி தலையசைக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Advertisment

மேலும், பெண் விவசாயி ஒருவர், “ராகுல் காந்திக்குத்திருமணம் செய்து வையுங்கள்” என்று கூறினார். உடனடியாக சோனியா காந்தி, “நீங்களே ஒரு பொருத்தமான பெண்ணைப் பாருங்கள்” என்று கூறினார். இதனைக் கேட்டு மற்ற பெண் விவசாயிகள் சிரித்தனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள சுப்ரியா ஸ்ரீநடே, “21வது வயதில் ராஜீவ் காந்தியின் மனைவியாகவும், இந்த நாட்டு மருமகளாகவும் வந்து தன் வாழ்நாளில் 55 ஆண்டுகளை இங்கு கழித்துள்ளார். ராஜீவ் காந்தியின் மனைவியாக 23 வருடங்களை மிக அழகாகக் கழித்தார். ஆனால் அதை விட, அவர் இல்லாமல், 32 ஆண்டுகளாக இங்கு அவதிப்படுகிறார். இந்த வீடியோவைப் பார்த்து சிறிது நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன், எப்படி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக, இவ்வளவு பாசத்துடன் இருக்க முடியும். இத்தனை வேதனைகளை அனுபவித்தாலும், எப்படிக் கோபமோ வெறுப்போ வராமல் இருக்கும்? இந்த நாட்டு மக்களின் நலனுக்காக மட்டும் பேசும் சோனியா காந்தி, மிகுந்த அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் எப்படிச் செயல்பட முடியும் என நான் வியக்கிறேன். இந்த நாடு எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்.உங்கள் அர்ப்பணிப்புக்கு தானாகவே வந்து தலைவணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

haryana congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe