punjab farmer incident for farmers struggle

Advertisment

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியைக் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர். அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தொடர்ந்து 3 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (15.02.2024) மீண்டும் விவசாய அமைப்புகளுடன் சண்டிகரில் மத்திய அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இருப்பினும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சலோ என்ற பேரணி தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாகத்தொடர்ந்து வருகிறது.

Advertisment

இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞான சிங் (வயது 65) என்பவரும் கலந்து கொண்டார். அப்போது ஷம்பு எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி உள்ளனர். இந்த புகைக் குண்டில் இருந்து வெளியான புகையை சுவாசித்த கியான் சிங்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பாட்டியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விவசாயி கியான் சிங் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.