ADVERTISEMENT

பி.எஸ்.எஃப் விவகாரம்: நள்ளிரவில் இந்தியா - பாக். எல்லைக்கு சென்ற பஞ்சாப் துணை முதல்வர்!

10:51 AM Oct 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு (பி.எஸ்.எஃப்) அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சர்வதேச எல்லையிலிருந்து மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை என்ற எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய உள்துறை அமைச்சகம் 50 கிலோமீட்டராக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 50 கிலோமீட்டர் பகுதி வரை எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்தல் மற்றும் சோதனையிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ‘எல்லைப் பாதுகாப்பு படையின் செயல்திறனை மேம்படுத்தவும்’ மற்றும் ‘கடத்தல் மோசடிகளை ஒடுக்கவும்’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "சர்வதேச எல்லைகளில் 50 கி.மீ. வரம்புக்குள் எல்லைப் பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். விவேகமற்ற இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்தார்.


இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, நேற்று (15.10.2021) நள்ளிரவில் திடீரென இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான அமிர்தசரஸ் அஜ்னாலா பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் எல்லை பாதுகாப்பு படையினரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, எல்லை பாதுகாப்பு படை எல்லையிலேயே நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியாதவது, “எல்லை பாதுகாப்பு படை எல்லையில் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காக மீதமுள்ள பகுதிகள் பஞ்சாப் காவல்துறையின் வசம் விடப்படவேண்டும்.

எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், கிராமங்களைச் சுற்றிவளைத்து சோதனைகளை நடத்துவார்கள் என மக்கள் பயப்படுகிறார்கள். எல்லை பாதுகாப்பு படையினர் கிராமங்களுக்குள் நுழைந்து சோதனைகளை நடத்தினாலோ, வழக்குகளைப் பதிவு செய்தாலோ அல்லது காவல் நிலையங்களை அமைத்தாலோ, அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியாகும்.

பஞ்சாபில் கண்ணுக்குத் தெரியாத அவசரநிலை போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. பஞ்சாப் காவல்துறையின் கைகளில் பஞ்சாப் பாதுகாப்பாக உள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்துவரும் போதை மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியான பஞ்சாபிகள் துன்புறுத்தப்படக்கூடாது.”

இவ்வாறு சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT