Skip to main content

காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பிரசாந்த் கிஷோர்?

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

prashant kishor

 

இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

 

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பஞ்சாப் முதல்வரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோரை முதன்மை ஆலோசகராக நியமித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் காங்கிரஸ் வேட்பாளர்களை, பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்வதாக தகவல் வெளியானது. 

 

இந்தநிலையில் இந்த தகவலை பஞ்சாப் முதல்வர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பிரசாந்த் கிஷோருக்கு வேட்பாளர் தேர்வில் சொல்வதற்கு எதுவுமில்லை. எனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோரின் பணி வரையறைக்குட்பட்டது. அவரது பணி, ஆலோசனை வழங்குவது மட்டுமே. முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை" என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Next Story

பிரதமர் பேச்சால் சர்ச்சை; குவியும் கண்டங்கள் - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Opposition parties condemned PM Modi's speech on Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதம அலுவலர்கள் தரப்பு, மோடி பிரச்சாரத்தில் திரித்து பேசுவாதக குற்றம்சாட்டியுள்ளனர். பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் இணைத்துப் பேசப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வந்து தவறான பிரச்சாரத்தைப் பிரதமர் முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ''தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தியடையட்டும்..'' என இந்திய தேர்தல் அணையத்தை சாடியுள்ளார். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து அமைதி காத்து வருவாதக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''பிரதமர் இப்போது பொதுமக்களின் கவனத்தை பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப விரும்புகிறார். முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, மோடியின் பொய்களின் அளவு மிகவும் அதிகரித்திருக்கிறது. தோல்வி பயத்தின் காரணமாக, வாக்களிக்கும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறார்..'' எனச் சாடியுள்ளார். அதுபோல பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''மோடி ஜி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. அதிகாரத்திற்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சியின் சிறப்பு. இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்தப் பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை..'' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆனால், இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மீது எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, வெறுப்பு பிரச்சாரம் செய்த மோடிக்கு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.