Skip to main content

முதல் கூட்டத்திலேயே அதிரடி முடிவை எடுத்த பஞ்சாப் அமைச்சரவை!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

Punjab Cabinet takes action at first meeting

 

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 

 

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் இன்று (19/03/2022) நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 10 பேரில் 8 பேர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அனைவரும் பஞ்சாபி மொழியிலே உறுதி மொழியை வாசித்து பதவியேற்று கொண்டனர். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Punjab Cabinet takes action at first meeting

 

அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சர் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், "எனது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்திற்குள் 25,000 காலி பணியிடங்களை அறிவிக்க பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் உறுதியளித்தபடி, நமது பஞ்சாப் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவது ஆம் ஆத்மி அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்துடன் காணொளியையும் வெளியிட்டுள்ளார். 

 

பஞ்சாப் அமைச்சரவை முடிவால் இளைஞர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.