Skip to main content

பச்சை மிளகாய் திருடர்களுக்கு கட்டி வைத்து தண்டனை! - ஒரு கிராமத்தின் ஆவேசம்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Punishment for green chili thieves!

 

கர்நாடகாவில் பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, தூணில் கட்டி வைத்த கிராம மக்கள், கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.  

 

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு, அதிக விலையும் கிடைத்து வருவதால், விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்தப் பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலையில், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள யட்டினஹள்ளி கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்து பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து,  தர்ம அடி கொடுத்ததுடன், தூணில் கட்டி வைத்து கடும் தண்டனை வழங்கியிருக்கின்றனர். 

 

Punishment for green chili thieves!

 

கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில்,  அவ்வப்போது அளவு குறைந்து காணாமல் போய் இருப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததால், நிலங்களைக் கண்காணித்து காவல் காத்து வந்தனர்.

 

திடீரென அதிகாலை வேளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரண்டு இளைஞர்கள் விளை நிலங்களில் புகுந்து, செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு, திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவலுக்கு இருந்த விவசாயிகளில் சிலர், அந்த இரண்டு இளைஞர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். 

 

Punishment for green chili thieves!

 

இதனைத் தொடர்ந்து,  அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இரண்டு பேரில் ஒருவரைக் கட்டி வைத்து, மற்றொருவரை கட்டப்பட்டவனின் தோளில் மீது ஏற்றி நிறுத்திவைத்து, கடுமையாகத் தண்டித்துள்ளனர். இதன் பின்னர், இத்தகவல் அறிந்து அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூர் வெடிகுண்டு விவகாரம்; சித்தராமையா தகவல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Siddaramaiah information about Bangalore Bomb Affair

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதியில் சென்றாரோ அந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? எனத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜ.க இதை அரசியலாக்கக் கூடாது” என்று கூறினார். 

Next Story

பெங்களூருவில் பயங்கரம்; முதல்வர் சித்தராமையா விளக்கம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Bengaluru hotel incident Chief Minister Siddaramaiah explained

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர்.

உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் குழுவினர் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் ஓட்டலுக்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உணவகத்தில் பணிபுரியும் காவலாளி கூறுகையில், “நான் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். பல வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது" என்றார். இந்நிலையில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bengaluru hotel incident Chief Minister Siddaramaiah explained

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளிவர விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முழு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் குழுவிடமிருந்து உரிய தகவல் பெறப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் ஓட்டலில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.