ADVERTISEMENT

‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் நகைக்கடைக்காரரிடம் 50 லட்சம் மோசடி செய்த கும்பல்...

11:16 AM Jan 23, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘சதுரங்க வேட்டை’ படப் பாணியில் நகைக்கடைக்காரர் ஒருவரை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.

புனேவின் ஹடாஸ்பூரில் நகைக்கடை நடத்திவரும் நபர் ஒருவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். நகை வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த அவர், காலப்போக்கில் அந்த நகைக்கடைக்காரரிடம் நட்பு பாராட்டி அவருக்கு நெருக்கமானவராக மாறியுள்ளார். அந்த நபர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் நன்றாகப் பழகியதோடு, அவர்கள் வீட்டிற்குப் பால் விநியோகம் செய்வதையும் வாடிக்கையாகச் செய்துவந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் தனது நண்பர்கள் இருவரோடு அந்த நகைக்கடைக்காரரைப் பார்க்கவந்த அந்த நபர், மேற்குவங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அரியவகை மணல் தங்களிடம் இருப்பதாகவும், அதனைச் சூடேற்றினால் அது தங்கமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மணலை எவ்வாறு தங்கமாக மாற்ற வேண்டும் எனவும் நகைக்கடைக்காரருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இவர்களின் பேச்சால் கவரப்பட்ட நகைக்கடைக்காரர், அந்த நபரிடம் ரூ .30 லட்சம் ரொக்கமும், சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் கொடுத்து அந்த மணலை வாங்கியுள்ளார். கடைசியில் அந்த மணலை சூடேற்றியபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நகைக்கடைக்காரர், உடனடியாக இது தொடர்பாக ஹடாஸ்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மணலை விற்ற நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT