/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aadhil-in.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது ஆதில் அகமது தர் எனும் நபர் தான் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் இவனது வீடு அமைந்துள்ளது. 12 ஆம் வகுப்பு வரை படித்த ஆதில் அதன் பின் அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளான். தனது உறவினர் மூலம் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவன் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் தனது நண்பர்கள் இருவருடன் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்த இவன் தற்போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவனது புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அவன் பேசிய வீடியோவின் தகவலும் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியுள்ள அவன். 'நீங்கள் இதை பார்க்கும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். கடந்த ஓராண்டாக ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் பணியாற்றினேன். இது காஷ்மீர் மக்களுக்கான என் கடைசி பதிவு. இந்தியாவுக்கு எதிராக போராடி வரும் தெற்கு காஷ்மீர் மக்களுடன் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும். மேலும் எங்கள் இயக்கத்தின் தலைவரை சமீபத்தில் கொன்றதனால் நாங்கள் வலுவிழந்து விடுவோம் என நினைத்துள்ளனர், அது நடக்காது' என்று கூறியுள்ளான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)