ADVERTISEMENT

புதுவையில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிகம்...தடுப்பு நடவடிக்கை இல்லை என அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

11:26 PM Aug 30, 2019 | santhoshb@nakk…

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் பேசும் போது, “ புதுச்சேரி மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கஞ்சா விற்பனை தலைமை செயலகம் அருகில் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலம் முழுவதும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட இளைஞர்கள் பணத்திற்காக, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத குற்றச்செயல்களிலும் துணிச்சலோடு செய்வார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் அதிக மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்க்கு அடிமையாகி உள்ளனர். பல நேரங்களில் இருசக்கர வாகன விபத்தில் மரணமும் ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டிய அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT


புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வோர், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் யார், யார் என்பது காவல்துறையில் சாதாரண க்ரைம் பிரிவு போலீசார் வரையில் தெரியும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பல இளைஞர்கள் நகரில் பல இடங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி தவறு செய்பவர்கள் பிடிபட்டால் முகத்தை மூடி காவல்துறையினர் புகைப்படத்தை வெளியிடுவது எதற்கு என்றே தெரியவில்லை.

கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க அரசிடம் என்ன சட்டம் இருக்கிறது? சட்டம் கடுமையாக்கப்பட்டால் தான் தவறுகள் ஒரளவு தடுக்கப்படும். சமூக, சமுதாய சீர்கேடுகள் நிறைய நடக்கிறது. ஒரு சில திருநங்கைகள் கஞ்சா விற்பனை செய்வதுடன், வழிப்பறி செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களையும் அரசு நேர்வழிப்படுத்த வேண்டும். கோவா போன்ற பல சுற்றுலா நகரங்களில் கூட குறிப்பிட்ட பகுதியில் ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையுடன் இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை.

சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் அனைத்து தவறுகளையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களை மகிழ்விக்க பல ஒட்டல்களில் அரைகுறை ஆடையுடன் நாட்டியம் நடத்தப்படுகின்றது. குடி, கும்மாளம், ஆட்டம், பாட்டம், அரைகுறை ஆடையில் பெண்கள் அணிவகுப்பு இதுதான் சுற்றுலாவா? புதுச்சேரி மாநிலத்தை கேவலப்படுத்துகிறார்கள். பிற மாநிலத்தில் சுற்றுலா இல்லையா? ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, இயற்கை சுற்றுலா என இருக்கும். எத்தனையோ சுற்றுலாத்தலங்களில் மது அருந்தவும், புகை பிடிக்கவும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால் புதுச்சேரியில் அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். இதுபோன்ற தவறான செயலை அரசு தடுக்க வேண்டாமா? இதற்கு முதல்வர் உரிய பதிலை அளிக்க வேண்டும்” என்றார்.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT