
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " சட்டமன்றத்தில் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பவும் பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு தீபாவளி நலத்திட்ட பொருட்கள் நேரடி பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி 10 கிலோ, 2 கிலோ சர்க்கரைக்கான தொகையும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. அதோடு 4 மாத கால இலவச அரிசிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 43 கோடியே 85 லட்சம் லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ 3,500 வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும். இவையும் பணப்பரிமாற்றம் மூலமே வழங்கப்படும்.
புதுச்சேரியில் பால் உற்பத்தியை பொருத்தமட்டில் தன்னிறைவு இல்லை, அண்டை மாநிலங்களில் இருந்தும் பால் பெறுகிறோம். கர்நாடகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நமக்கு பால் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தட்டுப்பாடு நீங்கியுள்ளது. புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு தீர்ந்து விட்டது. அரசு நிறுவனமான பாண்லே தனியார் மயமாக்கப்படாது. நிச்சயமாக கூட்டுறவு நிறுவனமாக தொடரும். புதுச்சேரி வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ 2,000 கோடி நிதி வேண்டும் என பிரதமரிடமும் கேட்டிருந்தோம்.
அவர்கள் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் இந்த தொகை தருவதாக சொல்லி இருந்தார்கள். அதற்கான கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளரும் நிதி செயலாளரும் பங்கேற்றார்கள். இதில் ரூ 1400 கோடி கூடுதலாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு, பென்ஷன் அரியர்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த தேவையான நிதி ஆகியவை கிடைக்கும். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 400 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கும்.
மழை காலத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவில் தேங்காது" என்றார்.
அப்பொழுது"அரசு நிர்வாகத்தில் ஆளுநர் சபாநாயகரின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறதே...?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அரசு நிர்வாகத்தில் ஆளுநர், சபாநாயகர் தலையீடு இல்லை. அனைவரது ஒத்துழைப்புடன் தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும்" என்றார்.
.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)