Skip to main content

நாட்டு வெடிகுண்டு வீசி இரண்டு ரவுடிகள் கொலை!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

puducherry rowdies incident police investigation

 

புதுச்சேரி வானரப்பேட்டையின் பிரபல ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி. இவர்கள் இருவரும் இன்று (24/10/2021) பிற்பகல் அலைன் வீதியில் இருசக்கர வாகனத்தில் நின்றப்படி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலைகுலைந்த ரவுடிகள் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே, அனைவரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த முதலியார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பாம் ரவி மற்றும் அந்தோணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இருவரும் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் கூறினர்.

 

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் புதுச்சேரி முழுவதும் பரவியதையடுத்து, வானரப்பேடையைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மேலும் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரி மாநில கிழக்கு பிரிவு எஸ்.பி தீபிகா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

 

இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள் மூலமும், மோப்பநாய் உதவியுடனும் தடயங்களை சேகரித்து  விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பழைய ரவுடிகளான பாம் ரவி மற்றும் அந்தோணி,  தற்பொழுது ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ முயற்சி செய்து வருகின்றனர். இருந்தாலும், பழைய முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்துள்ளது. மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாம் ரவி முயற்சி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பாம் ரவியும், அந்தோணியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி நேற்று முன்தினம் (22/11/2021) இரவுதான் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுச்சேரியில் சமீப காலமாக கொலை, கொள்ளைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தற்போது பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு மத்தியில் ரவுடிகள் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.