புதுச்சேரியில் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதால் அந்த பகுதி முழுவதும் 'சீல்' வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவலர் அரவிந்த்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் மூலக்குளம் வழியாகத் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தடுப்பைத் திறந்து செல்ல முயன்றுள்ளார்.

அதனால் அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல்படை வீரர் அசோக், தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் இந்த வழியாக யாரும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்ராஜ் திடீரென ஊர்க்காவல்படை வீரர் அசோக்கை தாக்கினார்.
அதன் பின்னர், இரண்டு பேரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களைச் சமாதானப்படுத்தி தடுத்தனர். மேலும் இந்தக் காட்சிகளை அங்கிருந்த காவலர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார், காவலர் அரவிந்த்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.