puducherry petrol, diesel price tax reduced governor order

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி விலகியது. மேலும் தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதங்களை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையின் ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

Advertisment

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோராததால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது. மேலும், அதற்கான கோப்புகளைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று (25/02/2021) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அரசாணையைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைக்க, அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். வாட் வரி குறைப்பில் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறைய வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் இன்றையநிலவரப்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 86.08 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 92.55 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.