/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1-puducheery-art_0.jpg)
புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த அரங்கனூர் சுடுகாட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்துஎஸ்.எஸ்.பி தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள்நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ் என்கிற தமிழரசன் (வயது 39) என்பதும் பிளம்பர் வேலை செய்து வந்த அவர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தமிழரசன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்ட தமிழரசன் ஏற்கனவே ரவுடி கும்பலுடன் பழகி, பின்னர் அவர்களுடன் பிரச்சனை ஏற்படவே அங்கிருந்து விலகி மற்றொரு ரவுடி கும்பலில் சேர்ந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோதம் நாளுக்கு நாள் வலுத்து வந்த நிலையில், அரங்கனூர் பகுதி கிராமத்தில் நடந்த குத்தகை கூட்டத்தில் அதேஊரை சேர்ந்த இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலுக்கு தமிழரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தமிழரசனை அப்பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேர் காணும் பொங்கல் கொண்டாட வெளியே அழைத்துச் சென்று, அங்கு அவரை அடித்து கொலை செய்துவிட்டு அரங்கனூர் சுடுகாட்டில் வீசி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக பாகூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பலில்இருந்த தமிழரசன் சமீபத்தில் அந்த கும்பலில் இருந்து விலகி எதிர் தரப்பில் இணைந்துள்ளார். இதனால்கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பல் அவரை கடத்தி சென்று கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்துபுகாரை பெற்ற போலீசார் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் (வயது 34),அர்ஜுனன் என்கிற ஆனந்த்,கொத்துக்கா ஏழுமலை மற்றும் கடலூர் மாவட்டம் சிங்கிரி கோவில் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, சந்தோஷ், கார்த்திகேயன், புதுக்கடையை சேர்ந்த விஜயகுமார், வேல்முருகன், கீழ் குமார மங்கலத்தை சேர்ந்த தவமணி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலை கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)