
புதுச்சேரி காங்கிரஸ்ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (16.02.2021) அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று (17.02.2021) காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15லிருந்து 10 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணியான தி.முக உறுப்பினர்கள் 3, காங்கிரஸ் ஆதரவு சுயச்சை 1 சேர்ந்து 14 ஆக உள்ளது.அதேசமயம் எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் - 7, அ.தி.மு.க - 4, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் 3 என 14 ஆக உள்ளது.
ஆளும் கூட்டணி, எதிரணி என இரண்டு அணிகளிலும் சம அளவில் 14 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளதால் ஆளும் கூட்டணி 15 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டும்.அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும்" என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்தின. மேலும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை செயலரிடம் 'ஆளும் அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என மனு அளித்தனர்.
மனு அளித்து விட்டு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது துணைநிலை ஆளுநர் செயலரிடம் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்" என்று தெரிவித்தனர்.
Follow Us