Advertisment

பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? - என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை!

puducherry nr congress discussion assembly election

Advertisment

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து தனது அமைச்சரவையைராஜினாமா செய்த நாராயணசாமி, அதற்கான கடிதத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரியில் ஆட்சியமைக்க உரிமைகோராததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) பரிந்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்து, கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சரவையின் கோப்புகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் புதுச்சேரியில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்குச் சேகரித்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Advertisment

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களான நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ள நிலையில், மேலும் சிலர் இணைந்ததால், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதேபோல், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து பா.ஜ.க.வில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ஆர்.ரங்கசாமி தனது கட்சிநிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் வியூகம், பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் எம்.எல்.ஏ.கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கூட்டணிதொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

என்.ஆர்.ரங்கசாமியை பா.ஜ.க.வின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்பவன் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் நாளை (03/03/2021) என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

former cm rangasamy Puducherry nr congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe