/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t3_11.jpg)
புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t7888.jpg)
அந்த வகையில், இன்று (19/04/2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாஸில் உயர் மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டாயம் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது பற்றியும், கட்டுப்பாடுகள் குறித்தும், மானிய விலையில் முகக்கவசம், சானிடைசர் விநியோகிப்பது பற்றியும் துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t4_7.jpg)
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t5_9.jpg)
இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், "புதுச்சேரியில் நாளை (20/04/2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். உணவகங்களில் இரவு 08.00 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். காலை 05.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மட்டுமே கடற்கரைக்குச்செல்ல அனுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us