புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ராகவன் (22) ஐதராபாத்தில் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். ராகவன் அதே ஊரைச் சேர்ந்த நர்சிங் படித்து வந்த அருணா (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் அருணாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அருணாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அருணா கடந்த 22- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து அருணாவின் பெற்றோர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தங்கள் மகள் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

PUDUCHERRY LOVERS INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

அதே சமயம் அருணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அருணா இறந்த தகவல் ராகவனுக்கு தெரிந்தால் அவர் உடனடியாக ஊருக்கு திரும்பினார்.

Advertisment

இந்நிலையில் நேற்று (24/02/2020) மாலை ராகவன் தனது நண்பர்களான புதுச்சேரி குருசுகுப்பம் சஞ்சய், சாமிப்பிள்ளை தோட்டம் சிவநேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.

அவர்கள் ராகவனை மட்டும் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவரது நண்பர்கள் தடுத்தனர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் சிவநேசனை அரிவாளால் வெட்டியது. இதனால் சிவனேசனும், சஞ்சயும் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது ராகவனை மட்டும் அந்த கும்பல் பைக்கில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது. அதனைத் தொடர்ந்து கோட்டைமேடு தனியார் பஞ்சு கம்பெனி அருகே ராகவனை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. மேலும் அந்த கும்பல் ராகவனின் முகம் மற்றும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

அப்போது அந்த பகுதியில் ஏதோ எரிகிறதே என அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது ராகவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கனகசெட்டிக்குளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தகவலறிந்த ராகவனின் உறவினர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் திரண்டு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ராகவன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரது காதலி இறந்த நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டதால் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.