Advertisment

‘ஒன்றிய’ சர்ச்சைக்கு விளக்கமளித்த புதுச்சேரி கவர்னர் மாளிகை! 

Puducherry Governor's House explains 'Union' controversy

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 27.06.2021 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சாய். சரவணகுமார், சந்திர. பிரியங்கா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” என உறுதிமொழியை வாசித்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து ‘மத்திய அரசு’ என்று அழைப்பதற்குப் பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியினர் ‘இந்திய ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்துகின்றனர். அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ‘இந்திய ஒன்றியம்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை பயன்பாடு குறித்த சர்ச்சைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

Puducherry Governor's House explains 'Union' controversy

அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இரு தினங்களுக்கு முன்பு புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வும் நடந்தேறியுள்ளது. அத்தகைய பெருமை மிக்க நிகழ்வில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பெருமையை மறைக்கும் அளவுக்கு ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்று திரித்துக் கூறப்பட்டுவருகிறது. 'ஒன்றிய அரசு' என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால் 'ஒன்றிய அரசு' என்று துணைநிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது 'தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம்' என்று கூறினார்களோ, அதேபோல் Indian union territory of puducherry என்ற வாசகம் 'இந்திய ஒன்றியம் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என மிக அழகாக வெகு காலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்தப் படிவம்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்குட்பட்டதால் Indian union territory என்கிறார்கள். அதாவது ‘இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு’. அதனால்தான் ஒன்றியம் என குறிப்பிடுவது union territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை.

Puducherry Governor's House explains 'Union' controversy

அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு' என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை. எனவே மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது.

தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பைக் குறைக்கும் வகையில் ஒன்றிய என்ற சொல்லாடல் சிலரால் தவறாக கருத்து பரப்பப்படுகிறது. இதுபோன்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குறைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

controversy union Tamilisai Soundararajan Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe