புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Advertisment

puducheerry governor issue-High Court postponed judgement

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுவை ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது என்றும் யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய உள்துறை அமைச்சகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.

Advertisment

இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி ஏ. பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாரயணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுக்கு ஏற்பத்தான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியும். அவருக்கென தனியாக பிரத்யேக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. அவ்வாறு சிறப்பு அதிகாரம் எதுவும் யூனியன் பிரதேச சட்டத்தில் அவருக்கு வழங்கப்படவில்லை. தேவைப்படும் நேரங்களில் அமைச்சரவை வழங்கும் அறிவுரையின்படியே ஆளுநர் செயல்படவேண்டும்.

மாநில அளவில் சட்டமியற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை. மேலும், துணை நிலை ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ, நிர்வாகப் பணிகளில் தலையிடவோ அதிகாரம் இல்லை என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மேல் முறையிட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.

மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதுவை யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளை கண்காணிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.